சமதர்மிகளின் மே நாள் கூட்டங்கள்
மே தின நிகழ்வுகளைத் தமிழ்நாட்டில் வெகு மக்களிடையே
கொண்டு சென்ற அமைப்பு சுயமரியாதை இயக்கம்தான்.
1923 ஆம் ஆண்டே மே முதல் நாள், தோழர் சிங்காரவேலர் சென்னை நேப்பியர் பூங்காவில் கொடியேற்றி மே நாள்
கூட்டம் நடத்தினார். அதுவே தமிழகத்தில் நடைபெற்ற முதல் மே நாள் நிகழ்வு. எனினும்,
1933 ஆம் ஆண்டு தந்தை பெரியார்தான் அதனைத் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும், எல்லா
மக்களிடமும் கொண்டு சென்றார்.
மே நாள் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு இந்தியாவிலும், பிற
நாடுகளிலும் பல தடைகள் இருந்துள்ளன. தோழர் சிங்காரவேலர் தன் முன்னோடியாக ஏற்றுக்கொண்ட,
இங்கிலாந்தில் வாழ்ந்த சக்லத்வாலா, 1926 மே நாளன்று, லண்டன் பூங்கா ஒன்றில் உரையாற்றியதற்காக
கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் அவர்
அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் வேறு. அவருக்கும்
சிங்காரவேலருக்கும் நெடுநாள் தொடர்பு இருந்துள்ளது. அதனையொட்டி, பெரியார் தன் ஐரோப்பியப்
பயணத்தில் அவரைச் சந்தித்து உரையாடிய செய்தியை பின்னாளில் தோழர் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பின்னணியில், சக்லத்வாலா குறித்துச் சில செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர் குறித்த விரிவான செய்திகள் பலவற்றை, தமிழ்நாடு
பொதுவுடைமைக் கட்சியின் மூத்த உறுப்பினர், மறைந்த சி.எஸ். சுப்ரமணியன் தன் நூலில் எழுதியுள்ளார்.
சக்லத்வாலா பிறப்பால் இந்தியர்தான். அன்றைய பம்பாயில் பார்சி வகுப்பைச்
சேர்ந்த மிகப் பெரும் பணக்காரர் குடும்பத்தில் பிறந்தவர். இன்னும் சுருக்கமாகச் சொல்வதெனில்,
அன்று இந்தியாவின் முதல் செல்வந்தராக இருந்த ஜே.ஆர். டாட்டாவின் நெருங்கிய உறவினர்.
1905 ஆம் ஆண்டு, குடும்பத்தினரால் அவர் இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். தங்கள்
தொழில் நலனைக் கருதி, அவர் குடும்பத்தினர் அவரை அங்குள்ள லிபரல் கட்சியில் சேர்த்துவிட்டனர்.
ஆனால் அவரோ, தொழிலாளர்கள் மேல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். 1917 சோவியத் புரட்சி
ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக அவரை மாற்றியது. இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியில்
தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சி அளவில் மட்டுமின்றி, தன் சொந்த வாழ்விலும் அவர் ஒரு பொதுவுடைமைவாதியாகவே
இருந்தார். அங்கிருந்த தொழிலாளர் குடும்பப் பெண் ஒருவரையே மணந்து கொண்டார். அவரை
1925ஆம் ஆண்டு, இந்தியாவில் உள்ள கான்பூரில் பொதுவுடைமைக் கட்சித் தொடக்க விழாவிற்கு
அழைத்துவரச் சிங்காரவேலர் முயன்றார். அரசின்
தடையால் அப்போது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும் 1927 பிப்ரவரியில் இந்தியா
வந்துள்ளார். சென்னையிலும் சில கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஒரு கூட்டத்தில்,
காந்தியாரின் முதலாளி வர்க்க ஆதரவை எதிர்த்துப் பேசியபோது, அக்கூட்டத்திலிருந்த திரு.வி.க.
உள்படப் பலரும் அதனை மறுத்துள்ளனர்.
ஆனால் அந்தப் பயணத்தில் அவர் பெரியாரைச் சந்தித்ததாகத் தெரியவில்லை. 1932 ஆம் ஆண்டுதான் அவர்களின் சந்திப்பு ஐரோப்பாவில்
நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் மே நாள் நிகழ்வுகளை நடத்த வேண்டும்
என்று பெரியார் கோரிக்கை வைத்ததற்கு அந்தச் சந்திப்பும் ஒரு காரணம் என்றுகூறலாம்.
ஆனாலும் தமிழகத்தில் முதல் மே நாள் கூட்டம் முதல் தேதி நடைபெறவில்லை. "இம்மாதம் முதல் நாள் கடந்துவிட்ட போதிலும்,வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 21ஆம் தேதி, சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்மக் கொள்கைகளை
ஏற்றுக்கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தைப் பெருந்தினமாகக் கொள்ளல் மிக நலமாகும்.
அன்று காலையிலும், மாலையிலும் அந்தந்த கிராமங்களிலும், பட்டணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம்,
சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள்
கூட்டி, சமதர்மம் இன்னதென்று தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விளக்கமுறச் செய்யலாம்"
என்று பெரியார் 14.05.1931 அன்று குடியரசில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே, பொதுவுடைமைக் கருத்துகளை முதன்முதலில் மக்களிடம் கொண்டுசென்ற
பெருமை சுயமரியாதை இயக்கத்தையே சேரும்.
(தொடரும்)
நன்றி: நக்கீரன்
Comments
Post a Comment