அநீதி தொடர்ந்து அரசாள முடியாது!


    அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது .... அந்தப் பாலஸ்தீன மண்ணில் அழுகையும், அலறலும் இன்னும் ஓயவில்லை! 


    எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து போர் நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே இருக்கிற ஹமாஸ் என்னும் விடுதலைப் போராட்டப் படையை எதிர்கொள்ள இயலாமல், காசா என்னும் துண்டு நிலத்தில் வாழும் மக்களின் மீது, தொடர்ந்து குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இஸ்ரேல், துணை போகிறது அமெரிக்கா!


    1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை உருவாக்கிய போது, மக்கள் இல்லாத நிலத்திற்கு, நாடு இல்லாத மக்களை அழைத்து வருகிறோம் என்றார்கள், அந்தப் பகுதியைச் சொந்தம் கொண்டாடும் யூதர்கள்!


    அதனை மக்கள் இல்லாதநிலம் என்று சொன்னது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய்! அங்கு இருந்த அரபு மக்களை அடித்துத் துரத்தி விட்டுத்தான், அவர்கள் இது தங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாடினார்கள்!


    அமெரிக்காவின் தலையீடு காரணமாக, ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டு, இஸ்ரேல் என்ற நாடு உலக வரைபடத்தில் உருவானது! அத்துடன் நிறைவடையாத இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனத்தையும் கைப்பற்றிக் கொள்ளத் தொடர்ந்து போர் நடத்தி வருகிறார்கள்!


    இன்று வரையில் அங்கு 18,000 குழந்தைகள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களே 217 பேர் அங்கு பலியாகி இருக்கிறார்கள். தொண்டு ஊழியம் செய்ய வந்த ஐ.நா. அவையின் பணியாளர்களும் அங்கு மரணித்திருக்கிறார்கள்.


    இந்தக் கொடுமைகளை எதிர்த்து, ஜனநாயக உணர்வும், மனித நேயமும் கொண்ட மக்கள் உலகெங்கும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்!


    தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நேற்றைக்குத் தன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார்! "காசாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வுகள் நெஞ்சை உருக்குகின்றன. இந்திய அரசு உடனே தலையிட வேண்டும்! உலக நாடுகள் ஒருங்கிணைந்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்! இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கண்டித்துப்


    பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, சென்னையில் அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் இணைத்து ஒரு பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தி இருக்கிறது!


    மனசாட்சியும், ஜனநாயக உணர்வும் கொண்ட இஸ்ரேல் மக்கள் சிலரே இப்போது தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்! அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி, இந்தப் போருக்கு எதிராகக் குரல் கொடுப்பதையும், அதற்காக அவர் தண்டிக்கப்படுவதையும் தொலைக்காட்சிகள் காட்டின!


    அநீதி தொடர்ந்து அரசாள முடியாது! விரைவில் உலகம் விழிக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி பிறக்கும்!


- சுப.வீரபாண்டியன்


(20 செப்டம்பர் 2025 அன்று வெளிவந்த கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் சுபவீ அவர்கள் எழுதிய கட்டுரை.)

Comments