எரிச்சல்படும் குருமூர்த்தியும் எழுந்து நிற்கும் திராவிடமும்!


    அண்மையில், இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்த நேர்காணல், பாதி எரிந்த நிலையில் பேசும் பார்ப்பனியத்தின் குரலாக இருந்தது! 

     ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியில் பெரியார் (அவர்கள் மொழியில் ஈ.வே. ராமசாமி நாயக்கர்), அதிலிருந்து வெளியே வந்த பிறகு, முழுக்க முழுக்கப் பார்ப்பனிய எதிர்ப்பாளராக மாறினார். அதன் விளைவாக, தமிழ்நாட்டின் கலாச்சாரமே சீரழிந்து விட்டது. அப்போதெல்லாம் பிராமணாளைக் கண்டால் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள். இப்போது அதுவெல்லாம் போய்விட்டது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் ஒரு சீர்கேட்டை அவர் கொண்டு வந்து விட்டார் என்ற புலம்பலோடு அந்த நேர்காணல் தொடங்கிற்று! 

    நேர்காணல் முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு என்பதே மேலோங்கி நிற்கிறது. திராவிடம் தமிழுக்கு, தமிழ் அடையாளத்துக்கு எதிரானது என்பது போன்ற பொய்யான செய்திகள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டுள்ளன! 

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்றும். திருக்குறளைத் தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்னார் என்றும், உண்மையும் பொய்யும் கலந்து அந்த மேடையில் குருமூர்த்தி பேசினார்! தமிழை நீச பாஷை என்று சொன்னவர்கள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை! திருக்குறன் குறித்துப் பெரியார் எங்கே அப்படி எழுதியோ. பேசியோ இருக்கிறார் என்ற வினாவிற்கு இன்று வரையில் யாரும் ஆதாரத்தைக் காட்டவில்லை! 

    ஆனால் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!

    இன்னொன்றையும் அந்த நேர்காணலில் குருமூர்த்திசொல்கிறார்... தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றம் வரவில்லை என்றாலும், கோயில்களில் கூடும் கூட்டம் கூடி இருக்கிறது என்கிறார்! என்ன பொருள்? கோயில்களில் வருகிற கூட்டம். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசியலை முடிவு செய்வதில்லை என்பதுதான்! ஆனால் அந்த உண்மை ஏனோ குருமூர்த்திகளுக்குப் புரியவில்லை 

    இது போன்ற நேர்காணல்களால் எல்லாம் பெரியாரின் புகழையோ. திராவிடத்தின் வலிமையையோ இவர்களால் குறைத்து விட முடியாது! இருப்பினும் இங்கே இரண்டு செய்திகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது! 

    திமுகவின் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் குருமூர்த்திகளின் எரிச்சல் கூடிக் கொண்டே போவதைப் பார்க்கும் போது, திமுக தமிழ்நாட்டில் இப்போதும் வலிமையாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது! 

    இரண்டாவது, போலித் தமிழ்த் தேசியர்கள் வெறுமனே வாயசைப்புதான் செய்கிறார்கள். உண்மையாய்ப் பின்னால் இருந்து குரல் கொடுப்பவர் குருமூர்த்திதான் என்பதும் புரிகிறது!.

 - சுப.வீரபாண்டியன்

(13 செப்டம்பர் 2025 அன்று வெளிவந்த கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் சுபவீ அவர்கள் எழுதிய கட்டுரை.)

Comments